கிருஷ்ணகிரி அணையில் இருந்து 16,250 கனஅடி தண்ணீர் திறப்பு

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 16,250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-30 17:36 GMT

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 16,250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,400 கனஅடியாக இருந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 10,800 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

பிற்பகலில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. அதன்படி மதியம் 1 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,250 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டு அணையின் பிரதான 8 மதகுகள் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால் அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் சீறிபாய்ந்து சென்றது.

கலெக்டர் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 16,250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் தற்போது 50.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 16,250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் முழுவதும் பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதனால், பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டணம், கால்வேஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பொது மக்கள் யாரும் ஆற்றை கடக்க கூடாது. அணையின் பாதுகாப்பு கருதி நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டி உள்ளதால் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தயார் நிலையில் 37 குழுவினர்

தொடர் மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 37 இடங்கள் ஆபத்தான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக மணல் மூட்டைகள், பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை அலுவலர்கள் மூலமாக குழு அமைக்கப்பட்டு அனைத்து தாலுகாவிலும் 37 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர்கள் அறிவொளி, காளிபிரியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்