4-ம் மண்டல பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு

Update: 2023-09-19 15:49 GMT


திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் கால்வாய்கள் தூர் வாரும் பணி மும்முரமாக நடைபெற்றது.

திருமூர்த்தி அணை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாலாற்றை தடுத்து திருமூர்த்தி அணை கட்டப்பட்டது.இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீராதாரமாக உள்ளது. அது தவிர அணைக்கு பி.ஏ.பி. தொகுப்பு அணைகளும் கை கொடுத்து உதவி புரிந்து வருகிறது.

அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பின் பொறுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி.பாசனத்திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கு ஏதுவாக பி.ஏ.பி. பிரதான கால்வாய், உயர்மட்ட கால்வாய் மற்றும் உடுமலை கால்வாய், கிளை கால்வாய்கள் கட்டப்பட்டது. அதன் மூலமாக சுழற்சி முறையில் நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று தண்ணீர் திறப்பு

இந்த சூழலில் இன்று(புதன்கிழமை) 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. அதற்கு முன்னேற்பாடாக கிளைக் கால்வாய்கள் தூர் வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அப்போது கால்வாயில் தேங்கியுள்ள மண், செடிகள், புதர்கள் பணியாளர்களால் அகற்றப்பட்டு வருகிறது. ஒரு சுற்று தண்ணீர் மட்டுமே வழங்கப்படும் என்பதால் அதை பாதுகாப்பாக நிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு விவசாயிகளும் முனைப்புடன் கால்வாய்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக தண்ணீர் திருட்டு அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது. இதனால் அதிகாரிகள் குழு அமைத்து திருட்டை முழுவதுமாக தடுப்பதுடன் பாசன நிலங்களுக்கு முறைப்படி தண்ணீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்