முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125 அடியாக குறைந்தது

நீர்வரத்து குறைந்ததன் எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125 அடியாக குறைந்தது.

Update: 2023-02-10 20:30 GMT

தமிழக-கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடிக்கு மேல் இருந்தது. இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதேபோல் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல் நடவு பணி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 5-ந்தேதி அணையின் நீர்மட்டம் 126.45 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 159 கனஅடியாக இருந்தது.

இந்தநிலையில் கூடுதல் தண்ணீர் திறப்பு மற்றும் நீர்வரத்து குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 125 அடியாக குறைந்தது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 833 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்