குடகனாற்றில் தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்

குடகனாற்றில் தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீரால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-09-23 00:00 GMT

வேடசந்தூர் அருகே அழகாபுரியில் 27 அடி உயரம் கொண்ட குடகனாறு அணை உள்ளது. இந்த அணையில் மொத்தம் 15 ஷட்டர்கள் உள்ளன. அதில், 5 ஷட்டர்கள் பழுதடைந்ததால், அதனை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, பழுதடைந்த 5 ஷட்டர்களை சீரமைக்க தமிழக அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கியது. அதைத்தொடர்ந்து தற்போது குடகனாறு அணையில் ஷட்டர்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அணையின் உள்பகுதியில் குடகனாற்றின் குறுக்ேக சுமார் 8 அடி உயரத்துக்கு தற்காலிகமாக மண் மற்றும் கற்களால் தடுப்பணை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் அணை பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அப்போது அணையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தடுப்பணையின் ஒருபகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அணையில் தேங்கிய தண்ணீர் வெளியேறி குடகனாற்றில் வீணாகி வருகிறது. இதையடுத்து தற்காலிக தடுப்பணையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் அணையில் தேங்கிய தண்ணீர் வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்