அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Update: 2022-10-21 13:25 GMT

தளி,

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிதுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமராவதிஅணை

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளை தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும், ஓடைகளும் அணைக்கு கை கொடுத்து உதவி வருகிறது.

இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அதுதவிர சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஆறு மற்றும் கால்வாய்களை ஆதாரமாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நெல் சாகுபடிக்காக அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் நீர்இருப்பும் 80 அடிக்கும் கீழாக சென்று விட்டது.

நீர்வரத்து

இந்த நிலையில் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் அணைப்பகுதியில் 23 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 81.04 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,062 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அதேபோன்று பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தண்ணீர் திறப்பு

அதைத்தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. அணையின் நீர் இருப்பு உயர்ந்த பின்பு சுழற்சி முறையில் 4 மண்டலங்கள் மற்றும் தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 54 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அனைத்து வினாடிக்கு 894 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி திருமூர்த்தி அணையில் 8 மில்லி மீட்டரும், நல்லாறு பகுதியில் 9 மில்லிமீட்டரும் மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்