பனை மரத்தில் பதநீர் இறக்கும் பணி தொடங்கியது

உடன்குடி பகுதியில் பனை மரத்தில் பதநீர் இறக்கும் பணி தொடங்கியது.

Update: 2023-02-24 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி சுற்றுப்புற பகுதி கிராமங்களில் பனைமரத்தில் பதநீர் இறக்கும் பணி தொடங்கியது. ஒரு லிட்டர் ரு.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சுவையான பதநீர்

உடன்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஆயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பனைமரங்களில் இறக்கப்படும் பதநீர் சுவையாக இருக்கும். இந்த பதநீரிலிருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கும் மவுசு உண்டு.

இந்த 'உடன்குடி கருப்பட்டி' உற்பத்தி மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 5 மாதங்களில் நடைபெறும். இதற்காக பிப்ரவரி மாதத்தில் இருந்தே பதநீர் உற்பத்தி தொடங்குவது வழக்கம்.

விற்பனை

இந்த ஆண்டு பனைமரங்களில் பதனீர் இறக்கும் பணி தொடங்கியுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் பனை மரத்தில் ஏறி, இறங்கும் வசதிக்காக மரத்தை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. மேலும், பதநீர் தரும் பாழைகளை சீவி வைத்து, பக்குவப்படுத்தி கலசம் கட்டினர். தற்போது பதநீர் உற்பத்தியாகி கலசங்களில் சேகரமாக தொடங்கியுள்ளது. தற்போது பாழைகளில் குறைந்தளவு பதநீர் சுரக்கிறது. இந்த பதநீரை கொண்டு கருப்பட்டி காய்ச்ச இயலாது. இந்த பதநீர் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முதல் பதநீர் விற்பனை சூடுபிடித்து வருகிறது. ஒரு லிட்டர் பதநீர் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் கருப்பட்டி உற்பத்தி தொடங்கப்படும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்