கொடிவேரி அணையில் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் - குடும்பத்தோடு படையெடுக்கும் மக்கள்
தொடர் விடுமுறை காரணமாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கோபிசெட்டிப்பாளையம்,
தமிழகத்தில் சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, பொதுமக்கள் நீர்நிலைகளை தேடி படையெடுத்து வருகின்றனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் நீர் அருவி போல் கொட்டுவதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் கோடை விடுமுறை தொடங்கியதால் கொடிவேரி தடுப்பணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.
ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்து அருவி போல் கொட்டும் அணை நீரில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். அதே போல வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்துள்ளனர்.
அங்கு பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடியும் பரிசலில் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்படுவதால் நீர்வளத்துறை சார்பில் ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.