மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு-11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:
நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. பின்னர் இரவில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகமானது.
கால்வாய் பாசனம்
அணையின் அருகில் உள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீரும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கால்வாய் பாசன பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கால்வாய் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் வினாடிக்கு 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியிலேயே நீடிக்கிறது. இதனால் அணை கடல் போல காட்சி அளிக்கிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த நிலையில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நீர்வளத்துறை சார்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்ைட, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்ட கலெக்டர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பாக அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே பொதுப்பணித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே காவிரி கரையோரமாக வசிப்பவர்கள், தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
படகு போக்குவரத்து நிறுத்தம்
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர்த்தேக்கத்தில், நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கதவணை நீர்த்தேக்க பகுதியில், சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே, இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால், பூலாம்பட்டி கதவணை பகுதியில் மடை திறந்த வெள்ளமென தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதன்காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருதி விசைப்படகு போக்குவரத்தை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த ஒரு மாதத்திற்குள் 3-வது முறையாக விசைப்படகு போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மறுகரைக்கு செல்ல சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கோனேரிப்பட்டி கதவணை பாலம் வழியாக பயணிகள் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.