ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக சரிவு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
பென்னாகரம்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
நீர்வரத்து குறைந்தது
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 78 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
கண்காணிப்பு
இதனால் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை அளந்து கண்காணித்து வருகின்றனர்.