கனமழையால் ராமேசுவரம் கோவிலில் தண்ணீர் புகுந்தது

ராமேசுவரத்தில் கனமழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

Update: 2022-10-20 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரத்தில் கனமழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

பலத்த மழை

ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் ஓடியது. பல்வேறு கட்டிடங்களை மழைநீர் சூழ்ந்து நின்றது.

ராமநாதசுவாமி கோவிலின் சாமி சன்னதி பிரகாரத்தில் மழைநீர் புகுந்து தேங்கியது. இதனால் கோவிலுக்கு ேநற்று காலை வந்த பக்தர்கள் பிரகாரத்தில் தேங்கிய மழை நீரில் நடந்து சென்று தரிசனம் செய்தனர். தண்ணீரை மோட்டார் வைத்தும், தூய்மை பணியாளர்கள் மூலமும் வெளியேற்றும் பணியில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.

வீடுகளிலும் புகுந்தது

மார்க்கெட் தெரு பகுதியில் சில வீடுகளிலும் மழை நீர் புகுந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் ராமேசுவரம் நகர சபை தலைவர் நாசர்கான் நேரில் சென்று பார்வையிட்டார்.

மார்க்கெட் அருகே மழை நீர் மற்றும் கழிவு நீர் செல்லும் வாருகால் பகுதியில் அடைப்புகளை எந்திரம் மூலம் சரிசெய்து மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. அப்போது கவுன்சிலர் முகேஷ் குமார், மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

2-வது முறை

ராமேசுவரம் கோவிலில் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழையின் போதும் பிரகாரத்தில் மழை நீர் தேங்கி நின்றது. தற்போது 2-வது முறையாக மீண்டும் மழை நீர் தேங்கியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர். இதுபோல் இனி நடக்காதவாறு கோவில் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

ராமேசுவரம்-98.2, பாம்பன் -59.4, தங்கச்சிமடம்-50.30, கடலாடி-65, வாலிநோக்கம்-42.4, ராமநாதபுரம்-35.4, முதுகுளத்தூர்-20 திருவாடானை-15.2 மண்டபம்-12.

Tags:    

மேலும் செய்திகள்