ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வந்தது
வைகை வரத்துகால்வாய் பகுதியில் கோடைமழை காரணமாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகை வரத்துகால்வாய் பகுதியில் கோடைமழை காரணமாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகை தண்ணீர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போன நிலையில் வைகை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை நிரம்பியது. இதனால் மாவட்டத்திற்கு உபரி நீர்திறந்துவிடப்பட்டது. இதுதவிர குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஏறத்தாழ வைகை அணையின் கொள்ளளவை போன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தண்ணீர் சீறிப்பாய்ந்து ராமநாதபுரம் வந்து முடிந்த அளவு தண்ணீர் தேக்கப்பட்டது. இதுவரை வைகை தண்ணீர் சென்று எட்டிப்பார்க்காத பகுதிகளில் கூட தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டது. இருப்பினும் உபரி நீர் வேறு வழியின்றி கடலில் கலந்து வீணானது.
குறிப்பாக ராமநாதபுரம் பெரிய கண்மாயின் கொள்ளளவை தண்ணீர் எட்டியதால் பாதுகாப்பு கருதி கடலுக்கும், சக்கரக்கோட்டை கண்மாய்க்கும் திறந்துவிடப்பட்டது. பெரிய கண்மாயில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் முதல்போகம் விவசாயம் நன்றாக விளைவித்த நிலையில் 2-ம் போக விவசாயமும் அறுவடை செய்து வருகின்றனர். இதுதவிர, பயறு வகைகள், பருத்தி, மிளகாய் போன்றவையும் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தற்போது விவசாயத்திற்கு பயன்படுத்தியதுபோக பெரிய கண்மாயில் கோடைவெயில் காரணமாக தண்ணீர் வற்றியபோதும் 3 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் நிலத்தடி நீர் ஆதாரத்தை கோடையில் சமாளிக்க உதவியது. இந்நிலையில் வைகை நீர் வரத்துக்கால்வாய் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கோடை மழையால் ராமநாதபுரம் வரும் வைகை கால்வாய் பகுதிகளில் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. வழிநெடுக வைகை வரத்து கால்வாய்களில் பள்ளம் மேடுகளை நிரப்பிய மழைநீர் தற்போது பெரிய கண்மாயை வந்தடைந்துள்ளது.
ராமநாதபுரம் அருகே காருகுடி மதகு வழியாக தண்ணீர் வெளியேறி பெரிய கண்மாயை நோக்கி வந்த வண்ணம் உள்ளது. இதனால் 3 அடி உள்ள பெரிய கண்மாயின் நீர்மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. இவ்வாறு தண்ணீர் வருவதால் அடுத்த மழை வரை பெரிய கண்மாயை சுற்றி உள்ள பகுதிகளில் காய்கறி உள்ளிட்ட விவசாயத்திற்கும் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும் போதுமானதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.