ஆயிரம் கனஅடி நீரை களரி கண்மாய்க்கு திருப்ப நடவடிக்கை

வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் ஆயிரம் கனஅடி நீரை வேறு எங்கும் கொண்டு செல்லாமல் களரி கண்மாய்க்கு திருப்பி விட பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Update: 2022-11-06 14:36 GMT


வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் ஆயிரம் கனஅடி நீரை வேறு எங்கும் கொண்டு செல்லாமல் களரி கண்மாய்க்கு திருப்பி விட பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

எச்சரிக்கை

வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி என்ற நிலையில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது மீண்டும் 70 அடியை எட்டி உள்ளது. தற்போது அணைக்கு நீர் வரத்து 2 ஆயிரத்து 230 கன அடியாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி உள்வரும் அனைத்து நீரையும் வெளியேற்றி வருகின்றனர்.

இதனால் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதுடன் பொதுமக்கள் ஆற்றை கடப்பதோ, துணி துவைப்பதோ, ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவதோ கூடாது என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு உள்ள உபரி நீர் 2 ஆயிரத்து 230 கனஅடி நீரும் விரகனூர் பகுதியில் 300 கனஅடியும், வலது இடது பிரதான கால்வாய்களில் 400 கனஅடியும், ராமநாதபுரம் மாவட்டம் வரும் வழியில் ஏறத்தாழ 300 கன அடியும் எடுத்தது போக மீதம் உள்ள ஆயிரம் கனஅடி நீர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் வாய்ப்பு உள்ளது.

நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே வைகை தண்ணீர் வரத்தால் பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாய் ஆகியவை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது வரும் நீரை களரி கண்மாய்க்கு கொண்டு சேர்க்க பொதுப் பணித்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். பொட்டிதட்டி அருகில் மஞ்சுவலசை களரி கால்வாய் தடுப்பணையில் இருந்து இந்த தண்ணீரை களரி கண்மாய்க்கு திருப்பி விட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

களரி கண்மாய்க்கு கொண்டு சேர்க்கும் முன்னர் 36 கண்மாய்களை தாண்டி செல்ல வேண்டி உள்ளதால் அதில் 50 முதல் 75 சதவீதம் நிறைந்துள்ள கண்மாய்களை அடைத்து கடைசி வரை தண்ணீரை கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளனர். கடந்த காலங்களில் களரி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல 36 கண்மாய் பகுதியினரும் தங்கள் கண்மாய் ஓரளவு நிறைந்ததும் தாங்களாகவே அடைத்து வழிவிட்டு வந்த நிலையில் தற்போதும் அதே நடைமுறையை அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

நிரம்பும் வாய்ப்பு

ஆயிரம் கனஅடி தண்ணீரையும் முழுமையாக களரி கண்மாய்க்கு கொண்டு சேர்க்க முடியாத நிலையில் முடிந்தஅளவு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 36 கண்மாய் பகுதி கிராமத்தினர் ஒத்துழைத்தால் மட்டுமே களரி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். 2 ஆயிரம் கனஅடிக்கு அதிகமாக வரும் பட்சத்தில் களரி கண்மாய் தவிர ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கும் தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளோம். விவசாயிகள் தண்ணீர் கிடைக்குமா என்ற கவலையின்றி விவசாய பணிகளை மேற்கொள்ளலாம்.

மழையும் நன்றாக பெய்யத்தொடங்கி உள்ளதால் நீர்நிலைகள் அனைத்தும் தானாகவே நிரம்பும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்