எலச்சிபாளையம் அருகே, குடிநீர் குழாயை சரி செய்யகோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
எலச்சிபாளையம் அருகே குடிநீர் குழாயை சரி செய்யகோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் அருகே குடிநீர் குழாயை சரி செய்யகோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் குழாய் உடைப்பு
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே கொத்தம்பாளையத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் திருமணிமுத்தாறு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாலம் அமைக்கும் பணியின்போது அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையொட்டி பல மாதங்களாக அப்பகுதி மக்கள் விவசாய தோட்டங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும் உரிய நேரத்தில் வெளியூர் வேலைக்கு செல்ல முடியாமலும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமலும் குடிநீர் பிடிப்பதற்காக பல மணி நேரம் மாணவ, மாணவிகள் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து அப்பகுதி கிராமமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட பாலம் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராமக்கள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் கொத்தம்பாளையத்தில் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எலச்சிபாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால், அகரம் ஊராட்சி மன்ற தலைவர் லதா மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுட்ட கிராமமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் வினியோகத்தை சீரமைத்து தருவதாக உறுதி கூறினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.