ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு நீர் வந்து சேர்ந்தது
வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு உள்ள தண்ணீர் சீறிப்பாய்ந்து ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்தது.
வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு உள்ள தண்ணீர் சீறிப்பாய்ந்து ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்தது.
உத்தரவு
வைகை நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால் உபரிநீர் திறந்துவிடப்பட்டு உள்ளதுடன் ராமநாதபுரம் மாவட்ட கணக்கில் இருந்து கடந்த 8-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை 1,148 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் வழிநெடுக உள்ள பள்ளம் படுகுழிகளை நிறைத்துவிட்டு மெல்ல மெல்ல ராமநாதபுரம் நோக்கி வந்தது. நேற்று காலை ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்தது.
இந்த தண்ணீர் ராமநாதபுரம் அருகே காருகுடி பகுதியில் அமைந்துள்ள தலைமதகு வழியாக சீறிப்பாய்ந்து பெரிய கண்மாயை நோக்கி வந்தது. புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மதகு வழியாக அதிக தண்ணீர் வந்ததால் பெரிய கண்மாயை தண்ணீர் சீக்கிரம் வந்தடைந்தது.
கண்காணிப்பு
வைகை அணையில் திறந்துவிடப்பட்டுள்ள ராமநாதபுரம் கணக்கிற்கான தண்ணீர் தற்போது பார்த்திபனூர் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளதால் தொடர்ந்து குறைந்தது 6 நாட்கள் வரை தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்து கொண்டிருக்கும் என்றும் அதன்மூலம் பெரிய கண்மாயில் 5 அடி வரை தண்ணீர் சேர்க்க முடியும் என்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கும் வேளையில் வழியில் தண்ணீரை திருப்பி திருடிக்கொள்ளாமல் தடுக்க வழிநெடுக பொதுப் பணித்துறையினர் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தண்ணீர் வேகமின்றி சீரான அளவில் வந்து கொண்டு இருப்பதால் உடைப்பு ஏற்படவோ, கரை உடைந்து ஊருக்குள் செல்லவோ பெரும்பாலும் வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைகை தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்து சேர்ந்ததை அறிந்த விவசாயிகள் அங்கு சென்று தண்ணீர் வருவதை மகிழ்ச்சியுடன் பார்த்து வரவேற்றனர்.
மகிழ்ச்சி
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கண்மாய் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் முதல்போக விவசாய பணிகளை நம்பிக்கையுடன் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.