விவசாய கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடு

விவசாய கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடு

Update: 2023-06-21 16:49 GMT

போடிப்பட்டி,


மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயக் கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

விவசாயக்கழிவுகள்

உலக வெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் ஓட்டை என பல்வேறு சவால்களை வருங்காலத்தில் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம் உள்ளது.மேலும் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, எரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் என பல காரணங்களால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.இந்தநிலையில் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு மூலம் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

காற்று மாசு என்பது நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச் சூழல் நெருக்கடியாகும்.அது கண்ணுக்குத் தெரியாத கொலையாளி என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.உலக அளவில் 1 லட்சம் பேரில் 86 பேர் காற்று மாசுபாட்டால் இறப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.தலைநகர் டெல்லியில் காற்று மாசு மூலம் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது.அதற்கு வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல் பஞ்சாப்பில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளும் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

ரெட்டிப்பு பலன்

இந்தநிலையில் மடத்துக்குளம் பகுதியில் பல இடங்களில் விவசாயக் கழிவுகளை தீ வைத்து கொளுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.குறிப்பாக கரும்பு அறுவடை செய்த நிலங்களில் எஞ்சிய கழிவுகளை தீ வைத்துக் கொளுத்துகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அறுவடைக்கு முன்பாகவே தீ வைத்துக் கொளுத்தும் பழக்கத்தை சில வட மாநில அறுவடைத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் ஓலை, மட்டை உள்ளிட்ட கழிவுகளை தீ வைத்து எரிக்கின்றனர்.இதுதவிர புதர்ச் செடிகளை அழிக்கவும் தீ வைத்து கொளுத்தும் பழக்கம் உள்ளது.

இதனால் காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல் விளை நிலங்களில் உள்ள நன்மை தரும் பூச்சியினங்கள் அழிவதற்கு காரணமாகிறது.எனவே விவசாயக் கழிவுகளை மக்கச் செய்து உரமாக்குவதன் மூலம் விவசாயிகள் ரெட்டிப்பு பலன் பெற முடியும். அத்துடன் சுற்றுச்சூழலைக் காப்பதற்கு தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க முடியும்.

திடக்கழிவு மேலாண்மை

அதுபோல உள்ளாட்சி நிர்வாகங்கள் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில்லை.

குப்பைக் கழிவுகளை ஆங்காங்கே குவித்து வைத்து தீ வைத்து கொளுத்தி வருகிறார்கள்.குப்பையிலுள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் எரிவதால் ஏற்படும் காற்று மாசு குறித்து உள்ளாட்சி நிர்வாகங்கள் கவலைப்படுவதில்லை.எனவே காற்று மாசு தடுப்பதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அக்கறை காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்