தரிசுநில மேம்பாட்டு திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தரிசுநில மேம்பாட்டு திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

Update: 2023-06-13 18:24 GMT

தரிசுநில மேம்பாட்டு திட்டம்

வாலாஜா ஒன்றியம் அனந்தலை ஊராட்சியில் கலைஞரின் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 13 விவசாயிகளின் 12.84 ஏக்கர் தரிசு நிலங்களில் ஆழ்துளை கிணறு, சொட்டுநீர் பாசனம் அமைத்து தென்னை மரம், மா, சப்போட்டா போன்ற செடிகள் நட்டு பராமரித்து வருவதை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தகரக்குப்பம் ஊராட்சியில் ராமு என்கிற விவசாயி வேளாண் பொறியியல் துறையின் மூலம் சோலார் பம்புசெட் அமைத்து விவசாயம் செய்து வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முசிறி ஊராட்சியில் அர்ஜுனன் என்கிற விவசாயி தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் சிப்பம் கட்டும் அறை அமைத்து விவசாயம் செய்து வருவதையும், மணிமேகலை என்பவர் ரூ.1 லட்சம் அரசு மானியம் பெற்று நிரந்தர கல்பந்தல் அமைத்து பாகற்காய் பயிர் செய்து வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

வேளாண் இடுபொருட்கள்

அப்போது 10 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருட்கள் மற்றும் 2 விவசாயிகளுக்கு தார்பாலின்கள், ஒரு விவசாயிக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் பவர்டில்லர் வழங்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது வேளாண் இணை இயக்குனர் வடமலை, துணை இயக்குனர்கள் விஸ்வநாதன், செல்வராஜ், உதவி இயக்குனர் திலகவதி, தோட்டக்கலை லதா மகேஷ், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர்கள் ரவிக்குமார், ரூபன் குமார் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்