வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக்கொலை

கரூரில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-08-31 18:15 GMT

அடித்துக் கொலை

கரூர் சக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 80). இவரது மனைவி அமராவதி(75). இந்த நிலையில் சுப்பிரமணியன் நேற்று அரவக்குறிச்சி பகுதியில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இதனால் அமராவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் சுப்பிரமணியன் வீட்டின் வழியாக சென்றபோது, சுப்பிரமணியன் வீட்டு வாசலில் ரத்தக்கறை படிந்து இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள் சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அமராவதியின் தலையில் கட்டையால் அடித்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பின்னர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து அமராவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் நாய் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமராவதி அணிந்திருந்த நகைகள் எதுவும் திருட்டு போகாததால் கொலை முன் விரோதம் காரணமாக நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் நகரப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்