விபத்தை ஏற்படுத்தும் வகையில்சாலையோரம் வாகனத்தை நிறுத்தி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை

Update: 2023-09-06 20:58 GMT

சேலம்

விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலெக்டர் ஆய்வு

சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூர் தேசிய நெஞ்சாலையில் நேற்று அதிகாலை சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விபத்து நடந்த இடத்திற்கு கலெக்டர் கார்மேகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சங்ககிரி உதவி கலெக்டர் (பொறுப்பு) தணிகாசலம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அதன்பிறகு கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

விலை மதிப்பில்லாத மனித உயிர்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாகன விபத்தை ஏற்படுத்த காரணமாக சாலையில் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த டிரைவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்