விவசாய கிணறு அருகே தேங்கும் சாக்கடைநீர்

Update: 2023-08-17 17:40 GMT


திருப்பூர் அருகே சென்னிமலைபாளையத்தில் விவசாய கிணற்றின் அருகே தேங்கி நிற்கும் சாக்கடைநீரால் கிணற்றுநீரை எதற்கும் பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது.

கிணற்றுப்பாசனம்

விவசாயிகளுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருவது கிணற்று நீர் பாசனம் ஆகும்.காலப்போக்கில் ஆற்றுப்பகுதிகளின் சீற்றங்களை சமாளிக்க முடியாமலும், மக்கள் தொகை பெருகியதாலும் மழை நன்றாகப்பெய்யக்கூடிய மேடான பகுதிகளுக்கு மனிதன் குடிபெயர்ந்தான். அங்கு எதேச்சையாக நிலத்தை ஆழமாகத் தோண்டும்போது ஊற்றுநீர் சுரப்பதைக் கண்டுபிடித்த பிறகு கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் தோன்றின.

கிணற்று நீரைக்கொண்டு குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தினார்கள். இவ்வாறுதான் நிலத்தடி நீரைக்கொண்டு செய்யப்படும் கிணற்றுப்பாசன விவசாய முறைகள் பரவலாகப் பெருக ஆரம்பித்தது. இப்படிப்பட்ட விவசாய கிணறு ஒன்றின் அருகில் சாக்கடைநீர் தேங்கி இருப்பதால் கிணற்று நீர் மாசடைந்துள்ளது.

சாக்கடைநீர் கலக்கிறது

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட சென்னிமலைபாளையத்தில் உள்ள குடிகிணறு தோட்டம் என்ற இடத்தில் உள்ள விவசாயிகளின் கிணற்றின் அருகே சாக்கடை நீர் தேங்குவதால் கிணற்றுநீர் மாசடைந்துள்ளது. சென்னிமலைபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாக்கடை நீர் அனைத்தும் இந்த இடத்தில்தான் தேங்கி நிற்கிறது. இதனால் கிணற்று நீரை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

இந்த விவசாய கிணற்றை 8 விவசாயிகள் பயன்படுத்தி வருகிறோம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் மஞ்சள், கரும்பு, வெங்காயம், உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வந்தோம். இந்த கிணற்றை சுற்றி சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாக்கடை நீர் கிணற்றில் ஊற்றாக வருகிறது. இதனால் இந்த நீரை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.

நோய்கள் பரவும் அபாயம்

தேங்கி நிற்கும் சாக்கடை நீரை குன்னாங்கல்பாளையத்தில் உள்ள ஓடை வழியாக விடுவதற்கு வழி இருக்கிறது. ஆனால் இதுவரைக்கும் யாரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிணற்றின் அருகே சாக்கடை நீர் தேங்கி உள்ளதால் கொசு உற்பத்தியாகி வருகின்றன. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயமும் உள்ளது.

விவசாயம் அழிந்து வரும் நிலையில் இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இது குறித்து மாவட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாய கிணறு அருகில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்