தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

ராமேசுவரம் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-19 18:40 GMT

ராமேசுவரம்

ராமேசுவரம் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் காலம் காலமாக இருந்து வரும் நடைமுறைகளை மாற்ற நினைக்கும் கோவில் இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உள்ளூர் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்யும் பாதையை திறக்க நடவடிக்கை எடுக்கவும், கோவிலின் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை உடனடியாக அகற்றவும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தரவும், காலம் காலமாக இருந்து வரும் நடைமுறைகளை மாற்றக்கூடாது என்பதை வலியுறுத்தியும் ராமேசுவரம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று அனைத்து கட்சியினர் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், ம.தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் கராத்தே பழனிசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சுகநாதன், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ராஜீவ்காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் ரவிச்சந்திரன், நிர்வாகி முருகானந்தம், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞரணி செயலாளர் ஜெரோன்குமார், யாத்திரை பணியாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினருடன் வருவாய் கோட்டாட்சியர் கோபு, தாசில்தார்கள் பாலகிருஷ்ணன். அப்துல் ஜபார் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு கொண்டு செல்லப்பட்டு சரி செய்யப்படும். போராட்டத்தை கைவிடுங்கள் என கேட்டுக்கொண்டார். இந்த உறுதி மொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்