68 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் - கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Update: 2023-11-07 05:29 GMT

தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. ஏற்கனவே முதற் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,310 கன அடியாக உள்ளது. தற்போது மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5,338 மி.கன அடியாக உள்ளது. இன்று மாலை அல்லது நாளை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே யானை கஜம் அருவியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். இதனால் கரையோரமுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்