தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

வருகிற 2024 - ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

Update: 2023-11-25 04:21 GMT

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தங்களை மேற்கொள்வதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளுக்கு விண்ணப்பிக்க வரும் 27-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் இன்றும் நாளையும் நடத்தப்படவுள்ளது.

இந்த சிறப்பு முகாம்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களிலும், அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும், அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடமும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும். 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். மேலும் www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி செல்போன் செயலி மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் டிச.2,3ல் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்