1¾ லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் 25-ந் தேதி வரை வழங்கப்படுகிறது

கடலூர் மாவட்டத்தில் 1¾ லட்சம் குழந்தைகளுக்கு வருகிற 25-ந் தேதி வரை வைட்டமின் 'ஏ' உயிர்ச்சத்து திரவம் வழங்கப்படுகிறது.

Update: 2023-09-19 18:45 GMT

அங்கன்வாடி மையங்கள்

நாடு முழுவதும், 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வருடத்திற்க்கு 2 முறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் வருகிற 25-ந் தேதி வரை (புதன்கிழமை நீங்கலாக) அனைத்து அரசு துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்படும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு 25-ந் தேதி (திங்கட்கிழமை) வழங்கப்படும்.

6 மாதம் முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 எம்.எல். மற்றும் 12 மாதம் முதல் 60 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு 2 எம்.எல். வீதம் இத்திரவம் வழங்கப்படுகிறது. வைட்டமின் 'ஏ' திரவம் எடுத்துக்கொள்வதினால் குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடு வராமல் தடுக்கிறது. மேலும் குழந்தைகளின் சரியான உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப் பெறுகிறது.

வைட்டமின் 'ஏ' உயிர்ச்சத்து திரவம்

இதன்படி கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 514 குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' உயிர்ச்சத்து திரவம் வழங்கப்பட இருக்கிறது. எனவே 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் கொடுத்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்