வேலூரை கல்வியின் விளைநிலமாக மாற்றியவர் விஸ்வநாதன்: முதல்-அமைச்சர் புகழாரம்
வீரத்தின் விளைநிலமாக விளங்கிய வேலூரை கல்வியின் விளைநிலமாக மாற்றியவர் விஸ்வநாதன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சென்னை,
வேலூரில் உள்ள வி.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, முத்தமிழறிஞர் மு.கருணாநிதி மாணவர் விடுதி மற்றும் பேர்ல் ஆராய்ச்சி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
வீரத்தின் விளைநிலமாக விளங்கிய வேலூரை கல்வியின் விளைநிலமாக மாற்றியவர் வேந்தர் விஸ்வநாதன். இன்றைக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் கல்வியில் சிறந்த நிறுவனமாக வி.ஐ.டி.யை விஸ்வநாதன் மாற்றி காட்டி இருக்கிறார். இந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் மாணவர் விடுதி ஒன்றை அமைத்து அதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாணவர் விடுதி என்று பெயர் சூட்டி இருப்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்று. கருணாநிதியுடைய பெயரை சூட்டியதற்காக முதல்-அமைச்சராக மட்டுமல்ல, அவருடைய மகன் என்ற முறையில் நான் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
26 வயதில் ஒருவர் எம்.பி. ஆனார் என்றால், அது நம்முடைய விஸ்வநாதன்தான். இந்தியாவிலேயே ஒரு இளம் வயதில் எம்.பி. ஆக அவர் அந்த பொறுப்பை ஏற்றார். அதில் இருந்து அவருக்கு ஏறுமுகம்தான். வேலூரில் 1984-ம் ஆண்டு 180 மாணவர்களுடன் மிகச்சிறிய அளவில் இந்த கல்லூரி தொடங்கப்பட்டது. இன்றைக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகமாக வளர்ந்திருக்கிறது. 3 மாநிலங்களில் 4 கல்வி வளாகங்களை வைத்திருக்கிறார். சுமார் 80 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இந்தியாவில் முதல் 20 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக வி.ஐ.டி. வளர்ந்திருக்கிறது. 60 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இந்த கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆசிய தரவரிசை பட்டியலில், உலக பல்கலைக்கழக தரவரிசையில் வி.ஐ.டி. இடம்பெற்றிருக்கிறது.
தமிழில் பெயர் சூட்டுங்கள்
சங்கர், சேகர், செல்வம் ஆகியோரும் அப்பாவை போலவே செயல்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அரசியலில் செயல்பட்டு இருந்தால், வாரிசு என்று சொல்லி விடுவார்கள். ஆனால் கல்லூரிகளில் அல்லது வேறு ஏதாவது தொழில்களில் இருந்தால் அந்த விமர்சனம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளைகளாக கல்வி சாம்ராஜ்ஜியத்தை கண்காணித்த காரணத்தால்தான் மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது.
விஸ்வநாதன் கல்வி பணிகளோடு சேர்த்து தமிழ் பணி ஆற்றுவதையும் கைவிடவில்லை. அதுதான் எனக்கு மிக மிகப்பிடித்த ஒன்று. உலக தமிழ் அமைப்பாக தமிழியக்கத்தை நடத்தி வருகிறார். இது மிக மிக முக்கியமான ஒன்று. தமிழ் பெயரைத்தான் வைக்கவேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறார். அதைத்தான் நான் சீர்திருத்த திருமண நிகழ்ச்சிக்கு செல்கிறபோது தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். அழகு தமிழ் மொழியில் பெயர் சூட்டுங்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
செயல் வடிவம்
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் பள்ளிக்கல்வியும், கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் கல்லூரிக்கல்வியும், முன்னேற்றம் அடைந்தது. நம்முடைய ஆட்சியில் உயர்கல்வியையும் தாண்டி, ஆராய்ச்சி படிப்புகளும் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சியமாக இருக்கிறது. என்னுடைய எண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுக்க இந்த வி.ஐ.டி. பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சென்னை எப்படி 'மெடிக்கல் கேபிடல்' (மருத்துவ தலைநகர்) என்று போற்றப்படுகிறதோ, அதேபோல் வேலூர், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் முயற்சியால் 'கேபிடல் ஆப் ரிசர்ச்' (ஆராய்ச்சி தலைநகர்) என்ற வகையில் வளரும்.
வி.ஐ.டி.யில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு மாநில மாணவர்களும் படிக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் உயர்ந்த நிலையை அடைவதுதான் இந்தியாவுக்கே பெருமை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
கலந்துகொண்டோர்
விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, காந்தி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், வி.அமுலு விஜயன், வேலூர் கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன், துணை தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், சேகர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம், துணை வேந்தர் ராம் பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.