ஒக்கூர் இலங்கை தமிழர்கள் முகாமில் ரூ.6 கோடியில் புதிய வீடுகள் கட்டும் பணிஅமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் பார்வையிட்டனர்
ஓக்கூர் இலங்கை தமிழர்கள் முகாமில் ரூ.6 கோடியில் புதிய வீடுகள் கட்டும் பணிகளை அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டனர்.
சிவகங்கை
ஓக்கூர் இலங்கை தமிழர்கள் முகாமில் ரூ.6 கோடியில் புதிய வீடுகள் கட்டும் பணிகளை அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டனர்.
அமைச்சர்கள் பார்வையிட்டனர்
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர் ஊராட்சியில், கட்டப்பட்டு வரும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புக்களின் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினா் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த ஈழத்தமிழர்களின் நலனை காக்கின்ற வகையில், அவர்களுக்கு அடிப்படை தேவைகள் அனைத்தையும் தமிழக அரசு வழங்கி பாதுகாத்து வருகிறது. அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரும் வகையில், தமிழகம் முழுவதும் கடந்தாண்டு 3,500 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது. அதேபோன்று, நடப்பாண்டிலும் 3,500 வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊருணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய 6 இடங்களில் இலங்கை தமிழா்கள் வாழும் பகுதிகள் உள்ளன.
தமிழகம் முழுவதும்
சிவகங்கை மாவட்டத்தில் முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களைச் சார்ந்த 3,242 நபர்கள் உள்ளனர் அதில் ஒக்கூரில் மட்டும் 236 குடும்பங்கள் உள்ளனர். இங்கு மொத்தம் 90 வீடுகளுக்கு மட்டும் ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் வீடுகளின் கட்டுமானப் பணிகளும், துறை ரீதியாக இப்பகுதியின் இதர அடிப்படை மேம்பாட்டுப் பணிக்களுக்கென ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும் என சுமார் ரூ.6. கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுபோன்று தமிழகம் முழுவதும் அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், தற்போது 15 முகாம்களில் பல்வேறு மேம்பாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.