அதிக அளவில் உற்பத்தியாகும் விசுவாமித்திரம் வகை தர்ப்பை புற்கள்

அதிக அளவில் உற்பத்தியாகும் விசுவாமித்திரம் வகை தர்ப்பை புற்களை தொழிலாளர்கள் சேகரித்து வருகின்றனர்.

Update: 2022-11-22 19:02 GMT

தா.பழூர்:

தர்ப்பை புல்

தர்ப்பை புல் ஆன்மிக பயன்பாட்டில் மிகவும் முக்கியமான ஒன்றாக பயன்பட்டு வருகிறது. திருமணம், கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேகம், யாகங்கள், ஹோமங்கள், வீடுகளில் நடைபெறும் கிரகப்பிரவேசம், உபநயனம், கரும காரியங்கள், தர்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தர்ப்பை பெரும் பங்கு வகிக்கிறது. எனவே தர்ப்பை புல்லுக்கு அதிக அளவு தேவை உள்ளது.

குசை, காசம், தூர்வை, மஞ்சம் புல், விரிகி, விசுவாமித்திரம், யவை ஆகிய 7 வகையான தர்ப்பை புற்கள் உள்ளன. அவற்றுள் விசுவாமித்திரம் என்னும் வகையை சேர்ந்த தர்ப்பை புல் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம் உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் உள்ள நஞ்சை வயல் வரப்புகளில் களைச்செடிகளாக பரவலாக முளைத்து பரவி உள்ளன.

விற்பனைக்காக சேமிக்கின்றனர்

இதில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் தென்கச்சிபெருமாள்நத்தம், இடங்கண்ணி, சோழமாதேவி, கோடாலிகருப்பூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் சம்பா பருவ காலத்தில் அதிக அளவில் விசுவாமித்திரம் தர்ப்பை புல் உற்பத்தி ஆகிறது.

இதனை சேகரித்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் பணியில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள டி.கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சில தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர். இதற்காக அவர்கள் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் விசுவாமித்திரம் வகை தர்ப்பையை சேகரித்து வருகின்றனர்.

குடும்பம், குடும்பமாக தங்கி...

இது பற்றி டி.கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் கூறுகையில், டி.கொளத்தூர் கிராமத்தில் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளிகள் அதிக அளவில் உள்ளனர். கரும்பு வெட்டும் வேலை இல்லாத நேரங்களில் டி.கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளிகள் ஹோமங்கள், பூஜைகளுக்கு தேவையான சமித்து குச்சி வகைகள், தர்ப்பை புல் வகைகள் ஆகியவற்றை சேகரிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அலைந்து, அவை கிடைக்கும் இடங்களில் இருந்து சேகரித்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் நஞ்சை வயல்களில் சம்பா பருவ காலத்தில் அதிக அளவு விசுவாமித்திரம் வகை தர்ப்பை கிடைக்கிறது. அதனை நாங்கள் குடும்பம், குடும்பமாக வந்து இப்பகுதியிலேயே தங்கி சேகரித்து காய வைத்து பெரிய கட்டுகளாக கட்டி ஊருக்கு எடுத்துச் சென்று விடுவோம். எங்கள் ஊரில் அதனை சரியாக பாடம் செய்து சிறு, சிறு கட்டுகளாக கட்டி மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வோம். பூஜைகளுக்கு தேவையான சமித்துகள், தர்ப்பை வகைகள் ஆகியவற்றை மொத்த வியாபாரிகள் எங்கள் ஊருக்கே வந்து வாங்கி செல்வார்கள். அதனை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்பார்கள்.

வருமானம் கிடைக்கும்

எங்களுக்கு கரும்பு வெட்டும் வேலை கிடைக்காத நேரத்தை வீணாக்காமல், இப்பகுதியில் கிடைக்கும் விசுவாமித்திரம் வகை தர்ப்பையை சேகரிப்பது எங்களது தொடர் வருமானத்திற்கு வழி செய்கிறது. ஒரு நாள் முழுதும் சேகரிக்கும் விசுவாமித்திரம் புற்களை பாடம் செய்து விற்பனை செய்தால் எங்களுக்கு ஒரு நாளுக்கான தினக்கூலி அளவில் வருமானம் கிடைக்கும், என்றார்.

தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் தர்ப்பை வகைகள் தா.பழூர் பகுதியில் உற்பத்தியாகி விழுப்புரம் மாவட்ட விவசாய கூலி தொழிலாளிகள் மூலம் மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதும், கிடைக்கும் ஓய்வு நேரத்தை வீணாக்காமல் மாவட்டங்களை கடந்து வந்து பயனுள்ள வகையில் சிறு சிறு வேலைகளை செய்து குடும்பமாக சம்பாதிக்கும் கூலி தொழிலாளிகளின் உழைப்பும் வியப்பானது தான் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்