விசைத்தறிகளுக்கு பாவுநூல் வினியோகம் நிறுத்தம்

Update: 2022-11-28 16:21 GMT


திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறிகளுக்கு பாவுநூல் வினியோகம் நிறுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

பாவுநூல் வினியோகம் நிறுத்தம்

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்பில் 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சீரற்ற பஞ்சு விலை காரணமாக நேற்று முதல் 2 வார காலத்திற்கு பாவுநூல் வினியோகத்தை நிறுத்திவைக்க உள்ளதாக திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

இதன்படி நேற்று முதல் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்களுக்கு பாவுநூல் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் விசைத்தறி தொழிலை சார்ந்த சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் 2 வாரம் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தினசரி ரூ.100 கோடி காடாத்துணி உற்பத்தி என 2 வாரத்திற்கு ரூ.1,400 கோடி துணி உற்பத்தி இழப்பு ஏற்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

துணிகள் தேக்கம்

இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறுகையில், "சீரற்ற பஞ்சு விலை காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது கொள்முதலை இழந்து கொண்டிருக்கின்றனர். நிலையற்ற நூல் விலையால் துணியின் விலையை நிர்ணயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் துணி வர்த்தகம் நடைபெறாமல் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள துணி தேக்கமடைந்துள்ளது.

மேலும் மின் கட்டண உயர்வால் துணி அடக்கவிலை உயர்ந்துள்ளது. விலை உயர்ந்த துணிகளை வாங்க வர்த்தகர்கள் யாரும் முன் வரவில்லை. எனவே இன்று (நேற்று) முதல் 2 வார காலத்துக்கு முற்றிலுமாக விசைத்தறியாளர்களுக்கு பாவுநூல் வினியோகத்தை நிறுத்தி ஜவுளி உற்பத்தியை குறைப்பது என்று முடிவு செய்துள்ளோம்" என்றார்.

தொழிலாளர்கள் வேலை இழப்பு

விசைத்தறியாளர்கள் சிலர் கூறுகையில், "பஞ்சு மற்றும் நூல் விலை சீராகாததால், ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவுநூல் தருவதில்லை. துணிக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாததால், கூலி பிரச்சினை நீடிக்கிறது. பாதி நாட்கள் மட்டுமே தறிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே மின் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அரசிடம் முறையிட்டுள்ளோம்.

அரசின் நல்ல முடிவுக்காக காத்திருக்கிறோம். பாவு நூல் நிறுத்தத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். எனவே ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்து விசைத்தறிகளுக்கு பாவுநூல் வினியோகம் செய்ய வேண்டும்" என்றனர்.

மேலும் செய்திகள்