கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

Update: 2022-09-20 18:45 GMT

கோவை

கோவையில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் அரசு ஆஸ்பத்திரியில் 30 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பள்ளி குழந்தைகள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் பலரும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளிலும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் காய்ச்சல் பாதிப்புக்கு 62 குழந்தைகள் உள்நோயாளிகளாகவும் 739 பேர் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்த மாதம் 407 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது சிறியவர், பெரியவர் என 30 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நிர்மலா கூறியதாவது:-

முககவசம் அணிய வேண்டும்

தற்போது வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் அச்சப்படும் அளவுக்கு நோயாளிகள் வரத்து இல்லை. காய்ச்சல், உடல்வலி, சோர்வு, தொண்டைவலி போன்றவை ஏற்படுகிறது. பொதுமக்கள், குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்.காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட துணை வியாதிகள் உள்ளவர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வைட்டமின் சி, புரோட்டீன் அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்.

40 படுக்கை வசதி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புக்காக வரும் குழந்தைகளை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் 40 படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்