58 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 58 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்
காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 58 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தி விடுமுறை
தொழிலாளர் ஆணையாளர் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி மற்றும் கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோர் மேற்பார்வையில் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் நேற்று திருப்பூர் நகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான நேற்று ஆய்வு செய்தனர்.
தேசிய விடுமுறை தினத்தில் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும்.
58 பேர் மீது நடவடிக்கை
தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 48 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது 30 முரண்பாடுகளும், 45 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது 28 முரண்பாடுகளும் மற்றும் 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது முரண்பாடுகள் எதுவும் இல்லை. மொத்தம் 93 நிறுவனங்களில் 58 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அந்த 58 நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.