விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை சூப்பிரண்டுகள் பணியிடை நீக்கம் - செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு இடமாற்றம்
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 2 துணை சூப்பிரண்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுபோல செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்தார்.
அக்கறையுடன் செயல்படாத போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே சமயம் நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு துரை பாண்டியன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். மேலும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை தொடா்ந்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூடுதலாக கவனிப்பார்.
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கூடுதலாக கவனிப்பார் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.