விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியல்

ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 202 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-16 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு.) விழுப்புரம் மின் பகிர்மான வட்டக்கிளையின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட தலைவர் முத்துக்குமரன், பொருளாளர் பாலகிருஷ்ணன், திட்ட செயலாளர் சேகர், துணைத்தலைவர் புருஷோத்தமன், சிறப்பு தலைவர் சிவசங்கரன், பொருளாளர் ஏழுமலை, வட்ட செயலாளர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் கோட்ட தலைவர்கள் பெருமாள், முத்துக்குமரன், மைக்கேல், வீரமுத்து, கோட்ட செயலாளர்கள் அருள், கன்னியப்பன், முருகானந்தம், ஏழுமலை உள்பட பலர் கலந்துகொண்டு, ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முத்தரப்பு ஒப்பந்தப்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி ரூ.380-ஐ வாரியமே நேரடியாக வழங்க வேண்டும், மின்வாரியத்தில் நிரந்தர ஊழியர்கள், ஊதிய உயர்வு, வேலைப்பளு பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்வு காண வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதன் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 202 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்