விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்ட தேர்வு முடிவில் குளறுபடி இருப்பதாக கூறி விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இக்கல்லூரி மாணவர்களில் சிலருக்கு கடந்த 2021-ம் ஆண்டு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று வழங்கப்பட்டிருந்த நிலையில் 2022-ம் ஆண்டு தோல்வி என குறிப்பிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3-ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு நாளை (புதன்கிழமை) அரியர் தேர்வுகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு அறிவிப்பிற்கு முன்பு மாணவர்கள், மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்யக்கோரி விண்ணப்பித்துள்ளனர். அந்த மறு மதிப்பீடு தொடர்பாக இதுவரை பல்கலைக்கழகம் முடிவுகள் ஏதும் வெளியிடாததால் அரியர் தேர்வாக எழுத வேண்டுமென கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மாணவர்கள் திடீர் போராட்டம்
இந்த தேர்வு முடிவில் ஏற்பட்ட குளறுபடியால் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் உருவானது. இதுதொடர்பாக மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், நேற்று விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லூரி நுழைவுவாயில் முன்பு நின்று ஒருவருக்கொருவர் கைகோர்த்துக்கொண்டு திடீரென மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த வருடத்தோடு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட உள்ளதால், எங்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.