விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் முற்றுகை

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் முற்றுகையிட்டனா்.

Update: 2023-02-01 18:45 GMT

தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க விழுப்புரம் மண்டலத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை காவலர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கும், அனைத்து பணியாளர்களுக்கும் விடுபடாமல் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், வழங்கப்படாமல் உள்ள ஊதியம் மற்றும் நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும், பணியின்போது இறந்தவர்களின் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்