வில்லரசம்பட்டி விற்பனைக்கூடத்தில் ரூ.131¼ கோடிக்கு மஞ்சள் விற்பனை

வில்லரசம்பட்டி விற்பனைக்கூடத்தில் ரூ.131¼ கோடிக்கு மஞ்சள் விற்பனையானது

Update: 2023-08-08 22:48 GMT

வில்லரசம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.131¼ கோடிக்கு மஞ்சள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர்் ராஜகோபால் சுன்கரா கூறினார்.

கலெக்டர் ஆய்வு

ஈரோடு வில்லரசம்பட்டி மற்றும் பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையத்தில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன.

இந்த விற்பனைக்கூடங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு வில்லரசம்பட்டியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்கி வரும் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க விற்பனைக்கூடத்துக்கு சென்ற கலெக்டர் அங்கு ஏலத்துக்காக வைக்கப்பட்டு இருந்த மஞ்சள் மாதிரிகளை பார்வையிட்டார். மஞ்சளின் தரம், வரத்து, விற்பனை விலை உள்ளிட்ட விவரங்களையும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

கலந்துரையாடல்

விவசாயிகளுக்கான கணினி செயலியான ஆல்பா மென்பொருள் மூலம் மஞ்சள் ஏலம் தொடர்பான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வியாபாரிகள் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடாசெய்யும் முறைகள் குறித்தும் கலந்துரையாடல் நடந்தது.

முன்னதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு சென்று அங்குள்ள 5 பெரிய கிடங்குகள், பரிவர்த்தனை கூடங்கள், சூரிய சக்தி உலர் களம், 4 உலர் களங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

விவசாயிகள் பயன்

மேலும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த மஞ்சள் மாதிரிகளை பார்வையிட்டார். மேலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ள மஞ்சள் மூட்டைகளையும் பார்வையிட்டு, எத்தனை நாட்கள் வைக்கப்படும். விற்பனை எப்படி நடைபெறும் என்பதையும் கேட்டு அறிந்தார். அங்குள்ள அக்மார்க் ஆய்வகத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறும்போது, 'ஈரோடு வில்லரசம்பட்டி விற்பனைக்கூடத்தில் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ரூ.131 கோடியே 27 லட்சம் மதிப்பில் 20 ஆயிரத்து 830 டன் மஞ்சள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 25 ஆயிரத்து 945 விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர்.

பெருந்துறை விற்பனைக்கூடத்தில் ரூ.42 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் 5 ஆயிரத்து 76 டன் மஞ்சள் விற்பனை மூலம் 2 ஆயிரத்து 440 விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர்' என்றார்.

இந்த ஆய்வின் போது ஈரோடு விற்பனைக்குழு செயலாளரும் துறை இயக்குனருமான சாவித்திரி, கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரி, சுரேஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்