மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி கிடக்கும் கிராமங்கள்

கொள்ளிடம், சீர்காழி பகுதிகளில் 4 நாட்களாக மழைநீர் வடியாமல் உள்ளது. மின்சாரம் இன்றி கிராமங்கள் இருளில் மூழ்கி கிடப்பதால் வீடுகளுக்கு செல்லாமல் மக்கள் பாதுகாப்பு முகாம்களிலேயே தங்கி உள்ளனர்.

Update: 2022-11-15 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம், சீர்காழி பகுதிகளில் 4 நாட்களாக மழைநீர் வடியாமல் உள்ளது. மின்சாரம் இன்றி கிராமங்கள் இருளில் மூழ்கி கிடப்பதால் வீடுகளுக்கு செல்லாமல் மக்கள் பாதுகாப்பு முகாம்களிலேயே தங்கி உள்ளனர்.

கொட்டித்தீர்த்த மழை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் கடந்த 11-ந் தேதி இரவு 44 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது. இதனால் குடியிருப்புகள், விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்தது. இந்த மழையால் மின்சாரம் தடைபட்டது.இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பு முகாம்களில் தாங்க வைக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால் மேடான பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் கடந்த 4 நாட்களாக முகாம்களில் தங்கி உள்ளனர்.

நெற்பயிர்கள் அழுகும் அபாயம்

மாதானம், உமையாள்பதி, பச்சை பெருமாள்நல்லூர், ஆலங்காடு, பழையபாளையம், குன்னம், வேட்டங்குடி, தற்காஸ், வடகால், கடவாசல், எடமணல், திருக்கருகாவூர், வழதலைக்குடி ஆகிய பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மழைநீர் வடியாமல் விளைநிலங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளின் சுவர் இடிந்துள்ளது. கடந்த 4 நாட்களாக கிராம பகுதிகளில் மின்சாரம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீரும், சமையலுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கவில்லை. மேலும் இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லையால் பொதுமக்கள் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கவலை

சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், திருமுல்லைவாசல், மாதானம், எடக்குடி வடபாதி, சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கடைவாசல், வடகால், விளந்திடசமுத்திரம், அகனி, வள்ளுவர்குடி, கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், திருப்புங்கூர், கன்னியாகுடி, கதிராமங்கலம், கற்கோவில், காரைமேடு, அரசூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை கடந்த 4 நாட்களாக மழைநீர் சூழ்ந்துள்ளது.இதேபோல் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. தேங்கியிருந்த தண்ணீர் வடிய தொடங்கிய நிலையில் நேற்று இரவு மீண்டும் மழை பெய்ததால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இருளில் மூழ்கி கிடக்கும் கிராமங்கள்

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மின்சாரம் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கொள்ளிடம் கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பள்ளிக்கூடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. 4 நாட்களாக மழைநீர் வடியாததால் கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தெருவிளக்குகள் தெரியாததால் இரவு நேரங்களில் கிராமங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.எனவே மின்சாரத்துறை சார்பில் விரைவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் பகுதியில் ஒரு சில கிராமங்களுக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது.

இழப்பீடு வழங்க வேண்டும்

வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கிராமப்புறங்களை ஆய்வு செய்து சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விளைநிலங்களை கணக்கீடு செய்து அரசு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்