அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள்

நாகை அருகே அடிப்படை வசதிகள் இல்லாமல் குடிநெய்வேலி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் எடுக்க 2 கிலோ மீட்டர் தூரம் செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

Update: 2023-05-09 18:45 GMT

நாகை அருகே அடிப்படை வசதிகள் இல்லாமல் குடிநெய்வேலி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் எடுக்க 2 கிலோ மீட்டர் தூரம் செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

குடிநெய்வேலி கிராமம்

நாகை அருகே பாப்பா கோவில் ஊராட்சியில் குடிநெய்வேலி கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் விவசாயிகளும், விவசாயக் கூலி தொழிலாளர்களுமே வசித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்கள் குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லாததால் சிட்டிசன் திரைப்படத்தில் வரும் "அத்திப்பட்டி" கிராமம் போல குடிநெய்வேலி கிராமத்தில் வசித்து வருவதாக அங்குள்ள மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குடிநீருக்கு 2 கி.மீ தூரம் செல்கின்றனர்

இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த யோகபிரியா கூறுகையில்,

குடிநெய்வேலி கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் உள்ள ஒரத்தூர் பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலையில் இருந்து வருகிறோம். அது ஒரு புறம் இருக்க, தண்ணீர் பிடிக்க சென்றால் ஒரத்தூர் பகுதி மக்களுக்கும், எங்களுக்கும் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண 7 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் நிரப்புவது கிடையாது. இதனால் அது காட்சி பொருளாகவே உள்ளது.

தோல் நோய்கள் ஏற்படுகிறது

அதேபோல கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் தண்ணீரும் சரியாக வருவது கிடையாது. தெருக்களில் உள்ள குழாய்கள் தாழ்வாக உள்ளதால், குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்க முடியவில்லை.

துணி துவைப்பது, குளிப்பதற்கு அருகில் உள்ள குளத்து தண்ணீரை பயன்படுத்துகிறோம். இந்த தண்ணீர் மாசடைந்து உள்ளதால், அதனை பயன்படுத்தும் சிலருக்கு தோல் நோய்கள் ஏற்படுகிறது.

தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. எனவே ஜல்ஜீவன் திட்டம் மூலம் எங்கள் பகுதிக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குறைந்த மின் அழுத்தம்

அதே பகுதியை சேர்ந்த கவிதா கூறுகையில், மனிதர்களுக்கு மூச்சுக்காற்று எப்படி முக்கியம் அதுபோல மின்சாரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எங்கள் பகுதியில் பல நாட்களாக குறைந்த அழுந்த மின்சாரமே கிடைக்கிறது. இதனால் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள டி.வி.யை கூட பார்க்க முடியவில்லை. இரவு நேரங்களில் மின்விசிறி இயங்காததால் புழுக்கத்தில் அவதிப்பட்டு வருகிறோம். இதனால் தேர்வு நேரங்களில் குழந்தைகள் படிக்க முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இதன் காரணமக எங்கள் கிராம இளைஞர்களுக்கு பெண் கொடுக்க தயங்குகின்றனர். எனவே குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவறை வசதியின்றி பெண்கள் அவதி

விமல்ராஜ் கூறுகையில், குடிநெய்வேலி கிராமத்தில் கழிவறை வசதி இல்லாததால் திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மழைக்காலத்தில் பெண்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

வீட்டுக்கு வீடு கழிவறை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்