காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

களக்காடு அருகே சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-29 18:58 GMT

களக்காடு:

களக்காடு அருகே சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

களக்காடு அருகே உள்ளது தெற்கு மீனவன்குளம் கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு அனைவருக்கும் குடிநீர் திட்டத்தின் கீழ் இங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இதற்காக 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகளும், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்பட்டது. ஆனால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

மேலும் தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த பொது குடிநீர் குழாய்களையும் அதிகாரிகள் துண்டித்ததால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள், அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

இருப்பினும் நீரேற்றம் செய்யப்படாததால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் காட்சி பொருளாகவே மாறி வருகிறது.

இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், தெற்கு மீனவன்குளத்திற்கு குடிநீர் சீராக வினியோகம் செய்ய வலியுறுத்தியும் கிராம மக்கள் நேற்று தெற்கு மீனவன்குளத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன் காலிக்குடங்களுடன் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சீரான குடிநீர் கேட்டு கோஷங்களும் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்