கிழக்கு கடற்கரை சாலையில் கிராம மக்கள் மறியல்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-01-10 18:38 GMT

அடிப்படை வசதிகள்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணி புரசக்குடி ஊராட்சியில் உள்ள கோபாலபட்டினம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சரியான சாலை வசதி இல்லை, போதிய குடிநீர் வசதி இல்லை. எங்கு பார்த்தாலும் குப்பை கிடங்காக கிராமம் உள்ளது. இதனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார் கோவில் தாசில்தார் வில்லியம் மோசஸ் மற்றும் மீமிசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது, உங்கள் கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் சம்பந்தப்பட்ட துறையிடம் கூறி உடனே சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்