சேதம் அடைந்த சாலையில் உருண்டு கிராம மக்கள் போராட்டம்

கமுதி அருகே மோசமான சாலையை சீரமைக்கக்கோரி சாலையில் உருண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2023-07-10 18:34 GMT

கமுதி, 

கமுதி அருகே மோசமான சாலையை சீரமைக்கக்கோரி சாலையில் உருண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டும்-குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இந்த கிராமம் கமுதி-சாயல்குடி சாலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சாலை தான் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது, இந்த சாலை கடந்த 20 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட சாலையாகும்.

இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல இந்த சாலையை தான் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள். சாலை மோசமாக இருப்பதால் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவை கூட இந்த கிராமத்திற்கு வருவது கிடையாது.

மேலும் விவசாய விளை பொருள்களை இந்த சாலை வழியாக கொண்டு செல்வதற்கு விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பொதுமக்கள் நூதன போராட்டம்

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும், எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் நேற்று நெறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கூட்டமாக சேர்ந்து சேதம் அடைந்த சாலையை சீரமைக்க கோரி கோஷம் எழுப்பினார்கள்.

10-க்கும் மேற்பட்டோர் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர். இது குறித்த வீடியோ தற்போது அந்த பகுதியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சாலையை விரைவில் சீரமைக்கவில்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக உள்ளதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்