கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
மங்களூர் ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுபாக்கம்
திட்டக்குடி அடுத்த ஆலம்பாடி ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மகாத்மா காந்தியின் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களை கணக்கெடுப்பு செய்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று காலை மங்களூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.