பாதை வசதி கேட்டு கிராம மக்கள் மறியல்
அலங்காநல்லூர் அருகே குடியிருப்பு பகுதிக்கு பாதை வசதி கேட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு பாதை வசதி வேண்டி பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மேலும் அலங்காநல்லூருக்கு செல்ல வேண்டுமென்றால் 3 கிேலா மீட்டர் தூரம் நடந்து தான் வர வேண்டி நிலைமை உள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் பிற்பட்டோர் நலத்துறை அதிகாரி அலுவலகத்தில் இருந்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பின்னர் ஊராட்சி நிர்வாகத்தினர் நேரில் சென்று விளக்கமும் அளித்தனர். இடத்தை வருவாய் துறை மூலம் தேர்வு செய்யும் பணியும் நடந்தது. ஆனால் முறையாக பாதை ஒதுக்கி தருவதில் காலதாமதம் நீடித்து வந்தது.. இதையொட்டி அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கல்லணை ஊராட்சி மன்ற தலைவர் சேதுசீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயல், அலங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், திருவள்ளுவர், வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது கிராமத்திற்கு பாதை வசதி செய்து தர அரசு மூலம் ஏற்பாடு செய்யப்படும் என பேசி முடிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அலங்காநல்லூர்- தனிச்சியம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.