ஆக்கிரமிப்பை தடுக்கக்கோரி ஆணையரிடம் கிராம மக்கள் மனு

சாத்தான்குளம் அருகே ஆக்கிரமிப்பை தடுக்கக்கோரி ஆணையரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-04-22 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே இரட்டைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து தலைமையில் கிராம மக்கள் சாத்தான்குளம் யூனியன் ஆணையர் ராணியை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "சாத்தான்குளம் அருகே இரட்டைக்கிணறு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரால் அரசு பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நன்கொடையாக அவருக்கு சொந்தமான இடம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் 1993-ம் ஆண்டு தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு குழந்தைகள் படித்து வந்தனர். இந்நிலையில் காலப்போக்கில் இந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்து பள்ளி மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அரசால் அந்த பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள அரசு நிலத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த பழைய பள்ளிக்கூடக் கட்டிடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கோவில் கட்ட முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூடத்திற்காக தானமாக வழங்கப்பட்ட அந்த இடத்தில் பள்ளிக்கூடம் சம்பந்தமான கட்டிடங்கள் மட்டுமே கட்டப்படவேண்டும். மாறாக தனி நபர்களுக்கு சொந்தமான கோவிலுக்கு அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவதை தடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்ற ஆணையர், உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உறுதி அளித்தார். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்