இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் மனு

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2022-12-19 16:37 GMT

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

இதில், திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, உபகரணங்கள், வேலை வாய்ப்பு, சாதி சான்றிதழ் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றப்பட்டன.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் கடந்த வாரங்களில் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் மந்தாகினி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வீட்டுமனை பட்டா

கீழ்பென்னாத்தூர் தாலுகா காட்டுமலையனூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், மேற்கண்ட முகவரியில் நிலையாக வசித்து வருகிறோம்.

விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு தனியாக குடும்ப அட்டை உள்ளது. எனவே எங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

கலசபாக்கம் தாலுகா வீரளூர் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்த காரணத்தால் அரசால் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைத்து சுமார் 1 வருடம் கடந்து விட்டது. ஆனால் இன்று வரை இதை மக்கள் பயன்பாட்டிற்கு விடவில்லை. பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது.

மேலும் எங்கள் பகுதியில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகம் குறைபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்