கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-10-17 20:43 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை ஒன்றியம், நூத்தப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், எங்களது கிராமத்தில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக செய்து தரவில்லை. அந்த அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும்.

100 நாள் வேலை

எங்கள் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 10 நாட்கள் கூட வேலை வழங்குவதில்லை. அந்த திட்டத்திற்குரிய வேலை நாட்களை எங்களுக்கு வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைக்கு பொதுமக்களாகிய நாங்கள் இதுவரை வாடகை கொடுத்து வருகிறோம்.ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் கட்டும் பணியை விரைந்து முடித்து ரேஷன் கடையை புதிய கட்டிடத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ரேஷன் பொருட்களை முறையாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர். இதையடுத்து அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர்.

ஆற்றில் கழிவுநீர்

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மருதையாற்றில் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திறந்து விடப்படும் கழிவுநீரால் தண்ணீரும், ஆற்றை சுற்றியுள்ள விவசாயமும் பாதிக்கப்படுகிறது. மருதையாற்றில் கழிவுநீரை கலப்பதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்களை அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூரில் புத்தக திருவிழாவை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 256 மனுக்களை பெற்றார். அவர் பேசுகையில், மழைக்காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி வடிகட்டி பின்பு குடிக்க வேண்டும். குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அருகே செல்ல விடாமல் பாதுகாப்புடன் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டரின் அறிவுரையுடன் மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்