ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
ராமநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் காந்தி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள மினிகுடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் தடுத்து மிரட்டி வருகிறார். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து ராமநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை தவிர்க்க கூடுதலாக ஒரு மினிகுடிநீர் தொட்டி அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.