பாக்கு மரத்தால் பாலம் அமைத்து வாய்க்காலை கடக்கும் கிராம மக்கள்
கோட்டவயல் கிராமத்துக்கு செல்ல சிமெண்டு பாலம் இல்லாததால் பாக்கு மரத்தால் பாலம் அமைத்து வாய்க்காலை மக்கள் கடந்து வருகின்றனர். இந்த ஆபத்தான பயணத்துக்கு முடிவு கிடைக்குமா? என எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்,
கோட்டவயல் கிராமத்துக்கு செல்ல சிமெண்டு பாலம் இல்லாததால் பாக்கு மரத்தால் பாலம் அமைத்து வாய்க்காலை மக்கள் கடந்து வருகின்றனர். இந்த ஆபத்தான பயணத்துக்கு முடிவு கிடைக்குமா? என எதிர்பார்த்து உள்ளனர்.
பாலம் இல்லை
கூடலூர் தாலுகா தேவாலா பகுதியில் ஆண்டுதோறும் அதிக மழை பெய்து வருகிறது. அங்கு ஏராளமான நீரோடைகள் உள்ளது. அந்த நீரோடைகள் போதிய அகலம் இல்லாததால், மழைக்காலத்தில் தண்ணீர் சீராக செல்ல வழி இல்லாமல் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் பொதுப்பணித்துறை நீர்வளம் மூலம் நீரோடைகளை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் தேவாலா அருகே கோட்டவயல் கிராமத்துக்கு செல்லும் வழியில் ஆற்று வாய்க்கால் செல்கிறது. இதன் குறுக்கே பாலம் கட்டாததால் அப்பகுதி மக்கள் மரக்கட்டைகளை கொண்டு பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் வாய்க்கால் தூர்வாரும் பணிக்காக மரப்பாலம் அகற்றப்பட்டது. தொடர்ந்து வாய்க்காலை கடந்து செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதி அடைந்தனர். மேலும் முதியோர், நோயாளிகள் செல்ல முடியாமல் இருந்தனர்.
தவறி விழும் அபாயம்
இதைத்தொடர்ந்து கால்வாயின் குறுக்கே பாக்கு மரங்களை கட்டி வைத்து உள்ளனர். அதன் மீது கிராம மக்கள் ஆபத்தான பயணமாக தடுமாற்றத்துடன் நடந்து வாய்க்காலை கடந்து செல்கின்றனர். சில சமயங்களில் முதியவர்கள் தவறி வாய்க்காலுக்குள் விழுந்து விடுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மழைக்காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே மரங்களை அடுக்கி வைத்து கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.