பழையகாயலில் கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்
பழையகாயலில் கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறுமுகநேரி:
பழையகாயல் ஊராட்சியில் உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்திற்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனகூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திராபுரம் கிராம மக்கள் நேற்று காலையில் காலிகுடங்களுடன் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் பழையகாயல் பஸ்நிறுத்தம் அருகே திரண்டனர்.
தங்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தியும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், பழைய காயல் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ராமச்சந்திராபுரம் பகுதியில் குடிநீர் சீராக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.