பயணிகள் நிழற்குடை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
மந்தாரக்குப்பம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம்,
பயணிகள் நிழற்குடை இல்லை
கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மந்தாரக்குப்பம் பேருந்து நிலையத்தில் இருந்து நெய்வேலி நகரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆதண்டார் கொல்லை கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோா் கடும் வெயிலிலும், மழையிலும் திறந்த வெளியிலேயே காத்துக்கிடக்க வேண்டிய நிலை உள்ளது. ஆதண்டார்கொல்லை கிராமத்தில் நிழற்குடை அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக என்.எல்.சி. நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இருப்பினும் இதுவரை நிழற்குடை கட்டித்தர நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மருதமுத்து தலைமையில் மாநில துணை செயலாளர் குரு, நெய்வேலி தொகுதி செயலாளர் வெங்கடேசன், கம்மாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் அகிலன் ஆகியோர் முன்னிலையில் ஆதண்டார்கொல்லை பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தரக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, நெய்வேலி நகர நிர்வாக அதிகாரி குப்புசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுகுறித்து என்.எல்.சி. உயர் அதிகாரிகளுடன் பேசி, விரைவில் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.