டிராக்டரை விடுவிக்க கோரி கிராமமக்கள் சாலை மறியல்
திருமங்கலம் அருகே டிராக்டரை விடுவிக்க கோரி கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே டிராக்டரை விடுவிக்க கோரி கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிராக்டர்
கிழவனேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் இந்திரா காலனியில் சாலை மேடு, பள்ளமாக உள்ளது. இந்த சாலை வழியாக கூட்டுறவு வங்கி மற்றும் இந்திரா காலனிக்கு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகிறது. இந்த சாலை மேடு பள்ளமாக உள்ளதால் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார், திருமங்கலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சவுந்தரராஜன் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக ஓடைப்பகுதியில் உள்ள மண் அள்ளி சாலையில் உள்ள மேடு, பள்ளங்கள் சரி செய்ய முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை மீனாட்சிபுரம் ஓடை பகுதியில் இருந்து மண் அள்ளி சாலைகளுக்கு கொட்டுவதற்காக 3 டிராக்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மண் அள்ளி கொட்டப்பட்டது.
சாலை மறியல்
அப்போது அனுமதி இன்றி மண் அள்ளப்படுவதாக நாகையாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் பொது பயன்பாட்டிற்கு மண் அள்ளியதால் டிராக்டரை விடுவிக்க வேண்டும் என கூறினர். வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் டிராக்டரை விட மறுத்தனர். பொதுமக்கள் இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் அனுமதி இன்றி அள்ளக்கூடாது எனக் கூறி டிராக்டரை விடுவித்தனர்.