குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

சிக்கல் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-05-22 18:45 GMT

சிக்கல்:

சிக்கல் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு

நாகை அருகே சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியின் மூலம் இந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 1 மாதமாக இந்த குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் வரும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

காலிக்குடங்களுடன் சாலை மறியல்

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கீழவெளியை சேர்ந்த கிராம மக்கள் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கல் பஸ் நிறுத்தம் முன்பு நேற்று காலை காலிகுடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து நாகை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

போக்குவரத்து பாதிப்பு

இதில் குடிநீர் தொட்டியில் உள்ள மின்மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து விரைவில் குடிநீர் வழங்கப்படும். ேமலும் டேங்கர் லாரியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் காரணமாக நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று காலை நேரத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்ததால் நாகை, நாகூர் வேளாங்கண்ணி, திருவாரூர் சென்ற பொதுமக்கள், வெளியூரில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், வேலைக்குச் சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்